×

கல்லிடைக்குறிச்சியில் நண்பர்கள் உதவியுடன் தாமிரபரணி ஆற்றில் 2 டன் கழிவு அகற்றிய ஆட்டோ டிரைவர்-பொதுமக்கள் பாராட்டு

நெல்லை : கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் விடப்பட்ட துணிகள், பூமாலைகள், மதுபாட்டில்கள் உள்ளிட்ட 2 டன் குப்பை கழிவுகளை நண்பர்களின் உதவியுடன் ஆட்டோ டிரைவர் அகற்றினார். இவரது சேவையை வரவேற்றுள்ள பொதுமக்கள் மனதார பாராட்டுத் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள பூங்குளம் என்ற பகுதியில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவநதியான தன்பொருநை எனப்படும் தாமிரபரணி ஆறு, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களை வளம் கொழித்து வருகிறது. இந்நதி நெல்லை மாவட்டத்தில் துவங்கி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் சங்கமிக்கிறது.

கடுமையான கோடை காலத்திலும் வற்றாமல் தன்னை நம்பி உள்ள மக்களுக்கு குடிநீரை வாரி வழங்கும் பெருமைக்குரிய தாமிரபரணி தற்போது பல்வேறு காரணங்களால் தனது ஜீவனை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தென்மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாய விளை நிலங்களின் பாசனத்துக்கும் அச்சாரமாகத் திகழும் தாமிரபரணி நதியானது, மதிகெட்ட மனிதர்களின் நெறியற்ற செயல்களால் பாழ்பட்டு வருகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாக்கடை கழிவு, குப்பைகள், கழிவு துணிகள், பூமாலைகள், பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி கழிவுகள், மதுபான பாட்டில்கள் ஆகியன அன்றாடம் ஆற்றில் பொறுப்பற்ற மனிதர்களால் விழிப்புணர்வின்றி வீசப்படுவது வாடிக்கையாகவே மாறிவிட்டது.

இதனால் புனிதமிக்க தாமிரபரணி நதியானது பாபநாசம் பகுதியிலேயே மனிதர்கள் பயன்படுத்த முடியாத வகையில் மாசற்று விளங்குகிறது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சங்கமிக்கும் கழிவுநீர் போன்றவற்றால் மாசுபடுவதால் பிற பகுதிகளில் ஆற்று தண்ணீரை பயன்படுத்த முடியாத வகையில் சுகாதாரமற்ற நிலை காணப்படுகிறது. இருப்பினும் இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், தாமிரபரணி பாதுகாப்பாளர்கள் போன்றவர்கள் தாமிரபரணி ஆற்றை மாசில் இருந்து மீட்டு பாதுகாக்கும் முயற்சியில் இடைவிடாது பாடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான லூர்துராஜ் என்பவர், கடந்த பல ஆண்டுகளாக வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் தேங்கிக்கிடக்கும் கழிவுபொருட்களை தினமும் தனது நண்பர்கள் உதவியுடன் அகற்றும் பணியை தளர்வின்றி செய்து வருகிறார். கடந்த 3 நாட்களில் 200 அடி தூரத்துக்கு தாமிரபரணியை தூய்மைப்படுத்தி உள்ளார்.

இதன் மூலம் சுமார் 2 டன் கழிவு பொருட்கள், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், மதுபான பாட்டில்கள், பயன்படுத்திய பழைய துணிகள், பழைய செருப்புகள்
உள்ளிட்டவைகளை அகற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வருங்கால சந்ததிகளுக்கு தூய்மையான தாமிரபரணியை ஒப்படைக்க தினமும் வேலை நேரம் போக மீதியுள்ள நேரத்தில் தாமிரபரணியை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவரது சேவையை வரவேற்றுள்ள பொதுமக்கள் மனதார பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

The post கல்லிடைக்குறிச்சியில் நண்பர்கள் உதவியுடன் தாமிரபரணி ஆற்றில் 2 டன் கழிவு அகற்றிய ஆட்டோ டிரைவர்-பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Copper River ,Kallidaikirici ,Kallilidyukirichi ,Copperani ,Kallytikarichi ,
× RELATED தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல்...